கோவை, ஆக.28: கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜிசிடி கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கத்தினர் தொழில்நுட்ப பணியாளர்களின் பதவிகளை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், செயற்குழு உறுப்பினர்கள் ராகவதேவி, ராமசாமி, ஆலோசகர் சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், தொழில்நுட்பக் கல்வித்துறையில் உள்ள தொழில்நுட்ப பதவிகளை மறுசீரமைப்பு செய்யும் பணியானது கடந்த 15 ஆண்டுகளாக நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூடுதல் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் பெற்றுள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் எவ்வித பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ பெற இயலாமல் பணிபுரிந்து பணி ஓய்வு பெறுகின்றனர். எனவே, எங்களின் நீண்டகால கோரிக்கையான தொழில்நுட்ப பணியாளர்களின் பதவிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். தொழில்நுட்ப பதவிகளை மறுசீரமைப்பு செய்யும் பணியினை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி தொழில்நுட்ப பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.



