Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேற்குதொடர்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் மூடல்

கோவை,ஆக.26: கோவை மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. தமிழக கடலோர பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் நேற்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் நலன்கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

மேலும், மாநகரில் துடியலூர், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், வடவள்ளி, சாய்பாபாகாலனி, வடகோவை, டவுன்ஹால், உக்கடம், குனியமுத்தூர், ராமநாதபுரம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் காலை வரை மிதமான மழை பெய்தது. தொடர்ந்து பெய்து கொண்டே இருந்த சாரல் மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சற்று பாதிப்பு அடைந்தனர். பல இடங்களில் சாலையோரத்தில் மழைநீர் தேங்கியது. கோவையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவியது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.