ரோடு இல்லை, குடிநீர் இல்லை, கழிவறைகளில் சுத்தம் இல்லை: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தின் அவலம்
கோவை, ஜூன் 25: கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் முறையான பராமரிப்பு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என பேருந்து பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் விடிய விடிய சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் அதிகளவில் காணப்படும். தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், பேருந்து நிலையம் முழுவதும் குப்பையும், கழிவுகள் கூடாரமாக காணப்படுகிறது. இங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். முக்கியமாக, பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், கழிவறைக்கு வெளியில் பயணிகள் பலர் சிறுநீர் கழிப்பதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசும் நிலையில், வெளியூரில் இருந்து கோவை வரும் பேருந்துகள் பல கழிவறையின் முன்பே பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லை.
பயணிகள் காத்திருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு சிலரும், பிச்சைக்காரர்களும் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பயணிகள் நிற்க முடியாத நிலை உள்ளது. தவிர, சாப்பிடும் உணவுகளையும் அவர்கள் பேருந்து நிலையத்தில் தூக்கி வீசி அசுத்தம் செய்கின்றனர். பயணிகள் மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர்களும் குப்பைகளை பேருந்து நிலையத்தில் வீசி செல்கின்றனர். இதனை முறையாக மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்துவது இல்லை. இதன் காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் குப்பையாகவும், அசுத்தமாகவும் காட்சியளிக்கிறது. தவிர, முக்கிய பேருந்து நிலையமான இங்கு முறையான சாலை வசதிகள் இல்லை.
பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால், பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் கீழே விழும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தினமும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் கோவை மத்திய பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கழிவறை பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், புதிய சாலையை பேருந்து நிலையத்தில் போட வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
