கோவை, செப்.25: கோவை மாநகர, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மண்டல தலைவர் தேர்வுக்கு நேர்காணல் நாளை மற்றும் நாளை மறுநாள் (26, 27ம் தேதி) ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார் தலைமை வகிக்கிறார். அகில இந்திய மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய கோவை மாநகர, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு மயிலாடு துறை முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, கோவையில் 4 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 13 சர்க்கிள் கமிட்டி கூட்டங்கள் கடந்த 20 நாட்களாக நடத்தப்பட்டது. கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகள் 1,527 வாக்கு சாவடிகளை கொண்டது. காங்கிரஸ் மறு சீரமைப்பின் படி, 10 வாக்கு சாவடிகளுக்கு ஒரு மண்டல தலைவர் தேர்வு செய்ய வேண்டும். எனவே நிர்வாக ரீதியாக கோவை மாநகர, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 13 சர்க்கிள் கமிட்டியை 176 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.


