கோவை, செப்.25: கோவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ள ‘வெற்றி பயணம்’ திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை வகித்தார். கோவை கோட்ட மேலாண் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழக முதல்வர் ‘வெற்றி பயணம்’ திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி துவங்க உள்ளதையொட்டி, கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், திட்டத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்பட உள்ள வழித்தடங்கள், பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் தொடர்பான விவரங்கள் குறித்து ஆய்வு செய்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


