கோவை, ஆக.17: கோவை மாநகர் பகுதியில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் சிலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள பிளாட்பாரம், புருக்பாண்ட் ேராடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பெரிய கடை வீதி பிளாட்பாரம் போன்றவற்றில் போதை கும்பல், வழிப்பறி திருடர்களால் அடிக்கடி தாக்குதல் நடப்பதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பிளாட்பாரம் பகுதிகளில் வழிப்போக்கர்கள் தங்குவது மற்றும் தூங்குவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விரட்டினாலும் சிலர் பிளாட்பாரங்களில் படுத்து தூங்கி விடுகிறார்கள். இதைத்தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக நள்ளிரவு நேரங்களில் பிளாட்பாரம் பகுதிகளில் வாட்டர் ஸ்ப்ரே செய்து வருகின்றனர். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் பகுதி பிளாட்பாரங்கள், கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியினர் தண்ணீர் வாகனங்கள் மூலமாக வாட்டர் ஸ்பிரே செய்கிறார்கள்.




