Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர்: 19 இடங்களில் லைப் கார்ட்ஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பு

மேட்டுப்பாளையம், ஜூலை 13: கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக்கொண்டு பில்லூர் அணை உள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது.கோவை, திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த பில்லூர் அணை இருந்து வருகிறது .மேலும், பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்தியும் நடந்து வருவதால் அணையில் இருந்து பவானி ஆற்றில் அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இதனால் பவானி ஆறு வற்றாத ஜீவநதியாக இருந்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் எப்போதுமே நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனையொட்டி பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் ஏராளமானோர் வருகிறார்கள்.

அதேபோல் பவானி ஆற்றங்கரையில் உள்ள தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிறுமுகை பழத்தோட்டம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக பவானி ஆற்றுக்கு வருகிறார்கள். வனபத்ரகாளியம்மன் கோவில் கிடாய் வெட்டிக்காக வரும் பக்தர்களில் சிலர், மதுபோதையில் பவானி ஆற்றில் குளிக்க வருகிறார்கள். அவர்கள் குளிக்கும்போது மின் உற்பத்திக்காக பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க செல்வோரில் சிலர், நீச்சல் தெரியாத காரணத்தால் சிலர், ஆழம் தெரியாத காரணத்தினால் சிலர் என பவானி ஆற்றில் மூழ்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

இந்த உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தின் முன்னாள் எஸ்பி பத்ரி நாராயணன் லைப் கார்ட்ஸ் என்ற பெயரில் குழு ஒன்றினை கடந்த பிப்.2023ம் ஆண்டு உருவாக்கினார். இந்த குழு ஒரு எஸ்ஐ தலைமையில் 7 காவலர்கள் என மொத்தமாக 8 பேர் கொண்ட ஒரு குழுவாக செயல்பட்டு வருகிறது. லைஃப் கார்ட்ஸ் வாகனத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி தத்தளிக்கும் நபரை மீட்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளன. இந்த குழு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த குழுவினர் தேக்கம்பட்டியில் இருந்து சிறுமுகை வரை உள்ள தேக்கம்பட்டி ஐடிசி பம்ப் ஹவுஸ், வனபத்ரகாளியம்மன் கோவில், விளாமரத்தூர், பூதப்பள்ளம், நெல்லித்துறை பம்ப் ஹவுஸ், நெல்லித்துறை படித்துறை, வெள்ளிப்பாளையம், ஆலங்கொம்பு ராமர் கோவில், வச்சினம்பாளையம், பழத்தோட்டம், ஊமப்பாளையம், ஊட்டி ரயில்வே பாலத்தின் அடியில், சமயபுரம் செக் டேம், உப்பு பள்ளம், சாமண்ணா வாட்டர் ஹவுஸ் என மொத்தமாக 19 இடங்களை அபாயகரமான இடங்களாக கண்டறிந்து அந்த இடங்களில் 24 மணி நேரமும் ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து லைப் கார்ட்ஸ் குழுவினர் கூறுகையில், பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் போலீசார் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கூறும் அறிவுறுத்தல்களை நீர்நிலைகளுக்கு செல்வோர் முறையாக கடைபிடிக்க வேண்டும். பவானி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் சுழல் மற்றும் ஆழம் அதிகம் இருப்பதால் கரையோரங்களில் மட்டுமே குளிக்க வேண்டும். பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் சைரன் ஒலிக்கப்படுகிறது. அவ்வாறு சைரன் ஒலித்தவுடன் பொதுமக்கள் ஆற்றில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்றனர்.