தொண்டாமுத்தூர், அக்.12: கோவை அருகே இக்கரை போளூவாம்பட்டி ஊராட்சி செம்மேடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செம்மேடு கிராமத்தின் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள திருவிக நகரில் அதிகமான மழை நீர் தெருக்களிலும் வீடுகளிலும் புகுந்தது. அதிக மழை வரும் போதெல்லாம் இந்த பிரச்னை ஏற்படுகிறது. 50 ஆண்டுகால இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக் கூறி பூண்டி ரோட்டில் அமர்ந்து மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு தவெகவை சேர்ந்த ரவிக்குமார் தலைமை தாங்கினார். தகவல் அறிந்ததும் பேரூர் தாசில்தார் சுரேஷ், ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஆர்ஐ கலைவாணி, ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


