கோவை, டிச.10: கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்த தேர்வு முடிந்தவுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர், பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித உபகரணங்கள் ஆகியவை சென்னையில் இருந்து வேன் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. இவை, ஒண்டிப்புதூரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.


