சூலூர், செப்.8: கோவை மாவட்டம் சோமனூரில் பள்ளி, வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கருமத்தம்பட்டி நகராட்சி சோமனூரில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடை எண் 2270 இயங்கி வருகிறது. இந்த. டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், வழிபாட்டுத் தலத்திற்கு 300 மீட்டருக்குள்ளும் உள்ளது. மேலும் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ளது. இதனால் சோமனூர்- காரணம்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், நேற்று டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆபாசமாக பேசினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் மதுப்பிரியர்களை அப்புறப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “இந்த மதுக்கடையை அகற்றுவதற்கு கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு முடிவுக்கு வந்தது.


