கோவை, செப். 7: கோவையில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் இறைச்சி மற்றும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்கள் எளிதில் பார்க்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அனைத்து இடங்களில் உள்ள உணவங்கங்கள் பேக்கரிகளில், இறைச்சிக்கடைகள், அசைவ உணவங்கள் பொருட்களின் விலைப்பட்டியல் தெளிவாக காட்சிப்படுத்துவது இல்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் உண்மையான விலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
தவிர, சமீபத்தில் ஏற்பட்ட வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை காரணம்கட்டி டீ, காபி, பஜ்ஜி, வடை மற்றும் தோசை, புரோட்டா, பிரியாணி உள்ளிட்டவையின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீ ரூ.20, ரூ.30, ரூ.50 போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சி கடைகளிலும் கூடுதல் விலைக்கு சிக்கன், மட்டன் போன்றவை விற்கப்படுகிறது. இந்நிலையில், ஓட்டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகளில் விலைப்பட்டியல் வைக்க உத்தரவிட வலியுறுத்தி கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் நா.லோகு தொழிலாளர் நலத்துறை செயலருக்கு மனு அளித்துள்ளார். அதில், ‘‘உணவு பொருட்களில் விலை அதிகரித்துள்ளது.
விலை விவரத்தினை அறிந்துகொள்ள முடியவில்லை. இதனால் அனைத்து தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், இறைச்சி கடைகளில் மற்றும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் கட்டாயமாக காட்சிப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


