கோவை, ஆக. 7: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை உக்கடம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர் ஹரி (27). இவர், மீது கடந்த 2023-ம் ஆண்டு ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பெரியகடை வீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹரி, பின்னர் நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து கோவை 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் சார்பில் உரிய உத்தரவுகள் மற்றும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஹரி தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக பிணையில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை மீறி தகுந்த காரணங்களின்றி ஆஜராகாமல் இருந்ததைத் தொடர்ந்து, பெரியகடை வீதி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் மீன் மார்க்கெட் அருகே பதுங்கியிருந்த ஹரியை போலீசார் கைது செய்தனர்.



