Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கு பயிர் காப்பீடு அறிவிப்பு

கோவை, ஜூலை 6: கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு காரிப் பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2016-17ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வட்டாரத்திற்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, தற்போது விவசாயிகள் காரிப் பருவத்தில் சாகுபடி செய்யும் வகையில் நெல், சோளம், மக்காச்சோளம், கொள்ளு, உளுந்து மற்றும் பச்சைபயறு ஆகிய பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்ட விவசாயிகள் நெல், சோளம், மக்காச்சோளம், கொள்ளு, உளுந்து, பச்சைபயிறு ஆகிய பயிர்களை சாகுபடி செய்திடும்போது இயற்கை பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள அவற்றை காப்பீடு செய்திட ஏக்கர் ஒன்றிற்கு நெல்லுக்கு ரூ.786, சோளத்திற்கு ரூ282.64, மக்காச்சோளத்திற்கு ரூ.740, கொள்ளுக்கு ரூ.238, உளுந்து மற்றும் பச்சைபயறுக்கு ரூ.374 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதற்காக விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ள குறிப்பிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீட்டிற்கான பீரிமியத்தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளும் வசதியினை பெறலாம். மேலும் பயிர்காப்பீடு தொடர்பான விவரங்களை பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கோவை வேளாண்மை இணை இயக்குனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.