Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா சாகுபடி...? அதிரடி சோதனைக்கு தயங்கும் என்ஐபி

கோவை, ஜூன் 4: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா சாகுபடி தடுக்க என்ஐபி, வனத்துறை, அதிரடிப்படையினர் சோதனை செய்ய தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேனி, கம்பம், குமுளி, வருஷநாடு, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வால்பாறை, பொள்ளாச்சி, வாளையார், ஆனைகட்டி, சிறுமுகை வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி நடப்பதாக அவ்வப்போது புகார் வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் குளிர் காற்று, லேசான ஈரப்பதம் உள்ள மலைப்பகுதியில் மட்டும் கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்கே ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்ப்பதாக கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் 30 முதல் 50 டன் எடையில் விதை நீக்கப்பட்ட உலர்ந்த தரம் பிரித்த கஞ்சா சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதை பிரித்து பல இடங்களில் விற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நன்கு வளர்ந்த ஒரு கஞ்சா செடியில் 500 முதல் 700 கிராம் எடையிலான கஞ்சா இலை சேகரிக்கப்படுகிறது. கோவை பாரப்பட்டி வனத்தில் 30 ஆண்டிற்கு மேலாக கஞ்சா சாகுபடி நடக்கிறது. வாளையாரில் இரு மாநில வன எல்லையில் அமைந்துள்ள பாரப்பட்டியில் தென்மேற்கு பருவ துவங்கும் ஜூன் மாதம் சாகுபடி துவக்குவதாகவும், ஜனவரி, பிப்ரவரியில் அறுவடை செய்து சப்ளை செய்ய திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்திருப்பதாக தெரிகிறது.

பருவ மழை துவங்கியிருப்பதால், ஏற்கனவே கஞ்சா சாகுபடி கும்பல் ஈச்சம்புல் காடுகளை சமன் செய்து தோட்டங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக உளவு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் கஞ்சா சாகுபடி செய்து அறுவடை செய்து கஞ்சா செடிகளை மலையில் காய வைத்து மூட்டையாக கட்டி தலை சுமையாக ஆனைகட்டி, சந்திராபுரம், வட்டபாறை வனப்பகுதி வழியாக கடத்துவது வாடிக்கையாக நடக்கிறது. வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வதற்காக பெரு மரங்களை வெட்டி வீழ்த்தி, புதர்களை அகற்றி பாதுகாப்பு காடு அமைப்பதாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கேரள வனத்துறையினர், தண்டர் போல்ட் போலீசார் அட்டபாடி, அகழி வனத்தில் கஞ்சா சோதனை நடத்தினர். இதில், கணிசமான கஞ்சா செடி தோட்டம் கண்டறியப்பட்டு தீ வைத்து அளிக்கப்பட்டது.

ஆனால், இதன் தொடர்ச்சி மலைகளான கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக கஞ்சா ரெய்டு நடத்தப்படவில்லை. பாரப்பட்டி, ஆனைகட்டி, சிறுவாணி வனப்பகுதியில் கஞ்சா பயிர்களை அழிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தவில்லை. 10 ஆண்டிற்கு முன் பாரப்பட்டியில் கஞ்சா கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திய பின்னர் அங்கே மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படவில்லை. கஞ்சா செடிகளை அழிக்க சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மீது கஞ்சா கும்பல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்டபாடியில் நடந்த கஞ்சா சோதனையின் போது கேரள வனத்துறையினர், கஞ்சா கும்பல் கோவை காட்டிற்குள் பதுங்கியிருப்பதாகவும், அவர்களை அங்கே சென்று பிடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். ஆனைகட்டி, சிறுவாணி பகுதியில் கஞ்சா சாகுபடி பல இடங்களில் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். கஞ்சா கும்பல் மீதான அச்சத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்ஐபி) போலீசார் வனத்திற்குள் கஞ்சா வேட்டையை தவிர்த்து வருகின்றனர். குறிப்பிட்ட சில கால எல்லையில் சோதனை நடத்த வேண்டியிருந்தால், வனத்திற்குள் குறிப்பிட்ட சில தூரம் வரை சென்று சோதனை செய்வதாக போட்டோ, வீடியோ எடுத்து வந்து விடுவார்களாம்.

இப்படித்தான் பல ஆண்டாக ‘ரெய்டு டூட்டி’ நடக்கிறதாம். கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. கஞ்சாவின் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகமாகி விட்டது. பல லட்சம் ரூபாய் கிடைப்பதால் கஞ்சா சாகுபடி, கடத்தல், விற்பனையில் பலர் களமிறங்கியிருப்பதாக தெரிகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளான ஆனைகட்டி, சிறுவாணி, பாரப்பட்டி, தோலம்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனத்தில் போதைப்பொருள் தடுப்பு போலீசார், வனத்துறையினர், அதிரடிப்படையினர் சோதனை நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.