பெ.நா.பாளையம், அக்.2: கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே ரயில்வே பாலத்தின் இரும்புத்தூண் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதனால் தூண் சரிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை நல்லாம்பாளையம் - கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் கவுண்டம்பாளையம் மேம்பாலம் பகுதியை கடப்பதற்காக அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, பாலத்தின் பாதுகாப்பு இரும்புத்தூண் மீது பலமாக மோதியது.
இதில், பாலத்தின் இரும்புத்தூண் பலத்த சேதம் அடைந்து அப்படியே நடுரோட்டில் ஆபத்தான நிலையில் சரிந்து விழுந்தது. இரும்புத்தூண் சரிந்து விழுந்த வேளையில், அதிர்ஷ்டவசமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் அடியில் சிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், சரிந்த தூணுக்கு இடையிலேயே ஆபத்தான சூழ்நிலையை உணராமல் அவ்வழியாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தனர்.

