கோவை, ஆக.18: கோவை மாநகரில் கடந்த ஒன்றரை ஆண்டில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகரில் தற்போது 1 லட்சத்து 11 ஆயிரத்து 74 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இவை, பராமரிப்பில்லாமல் உணவு தேடி சாலைகளில் திரிகிறது. பல நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரை துரத்துகிறது. அவர்கள், பயந்துபோய் நிலைதடுமாறி கீழே விழுந்து, கை, கால்களை முறிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இன்னும் சில நேரங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை துரத்துகிறது. பலரை கடித்து ரத்தக்காயம் ஏற்படுத்துகிறது. ஒரு சில இடங்களில் நடுரோட்டில் கும்பலாக படுத்துக்கொண்டு, அந்த வழியாக பயணிப்போரை விடுவதில்லை. துரத்தி, துரத்தி கடிக்கும் துயரம் தொடர்கிறது. இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த தெருநாய்களிடமிருந்து தப்பவே முடியாது. அந்த அளவுக்கு விடாமல் துரத்துகிறது.



