Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டவிரோதமாக செயல்பட்ட 8 சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’

மேட்டுப்பாளையம், ஜூலை 1: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மூலத்துறை, திம்மராயம்பாளையம், பெள்ளேபாளையம், பகத்தூர், வெள்ளிகுப்பம்பாளையம், சென்னம்பாளையம், தென் பொன்முடி, மூக்கனூர் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவுத்தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த தொழிலில் 5 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நெசவுத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50,000 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சிறுமுகை, எலகம்பாளையம், பெள்ளேபாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவுக்கு தேவையான நூலுக்கு சாயம் ஏற்றும் 30க்கும் மேற்பட்ட சிறு, சிறு சாயப்பட்டறைகள் குடிசைத்தொழிலாக குடியிருப்புகளுக்கு நடுவே செயல்பட்டு வருகின்றன.

இந்த சாயப்பட்டறைகளில் சாயங்கள், நிறமிகள், வேதிப்பொருட்கள், ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டு நூல்கள் நிறம் மாற்றப்படுகின்றன. அப்போது,வெளியேற்றப்படும் வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீர் அப்படியே குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் வழியாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இந்த சாக்கடை கழிவு நீர் அப்படியே பவானி ஆற்றில் நேரடியாக கலப்பதால் பவானி ஆறு மாசடைகிறது. இதனிடையே இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல் சாயக்கழிவுகளை நேரடியாக பவானி ஆற்றில் கலந்து விடுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உரிய அனுமதியின்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், சாக்கடை வடிகால் வழியாக பவானி ஆற்றில் சாயக்கழிவுகளை கலந்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்ட 8 சாயப்பட்டறைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், இதேபோல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் சட்ட விரோதமாக செயல்படும் சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெயரளவுக்கு மட்டுமே ஆய்வு

சாயப்பட்டறை கழிவுகளால் பவானி ஆறு மாசடைந்து வருகிறது என தொடர்ந்து புகார்கள் சென்ற பின்னரே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது உறக்கத்தை கலைத்து விட்டு அவ்வப்போது ஆய்வு என்ற பெயரில் சோதனையிட்டு சில சாயப்பட்டறைகளை மட்டுமே மூடி விட்டுச்செல்வதாக புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும், சிறுமுகை பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரிய அளவிலான பட்டு ஜவுளிக்கடை நடத்தி வரும் உற்பத்தியாளர்களும் இதுபோன்ற சாயப்பட்டறைகளை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அவ்வப்போது ஆய்வு என்ற பெயரில் பெயரளவுக்கு மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.