கரூர், அக். 30: கரூர் மாவட்டம், வெங்ககல்பட்டி அருகே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது எரிந்தது. கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து 13 டன் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கபாண்டியன் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வெங்ககல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைக்கவனித்த ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.சிறிது நேரத்தில் லாரியின் முன் பகுதியில் தீ மளமளவெனப் பரவி எரியத்தொடங்கியது. அப்பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஓட்டுநர் உரிய நேரத்தில் லாரியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கியதால் ஓட்டுநர் தங்கபாண்டியன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியது.


