கரூர், அக். 30: கரூர் கலெக்டர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கரூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ ஆகிய துறைகளின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கடனுதவிகள் மூலம் பயனாளிகள் தங்களது தொழில் முனைவுத்திறனை மேம்படுத்தி, சுயதொழில் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வழிவகை ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மகளிர் திட்ட இயக்குநர், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர், தாட்கோ மாவட்ட மேலாளர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


