கிருஷ்ணராயபுரம், ஆக. 29: கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூர் பகுதியில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட முனையனூர், சின்னமலைப்பட்டி பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதாக கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரமாக ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வரும் சூழ்நிலையில் இது போன்று அடிக்கடி ஆடுகள் திருடு போவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மாயனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



