அரவக்குறிச்சி, அக். 14: அரவக்குறிச்சி அருகே டூவீலரில் இருந்து தடுமாறி கீழே விழுந்த இளைஞர் பரிதாபமாக இறந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சித்திரைப்பிள்ளைவலசு அடுத்த வேட்டைக்காரனூர் சாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகன் ரமேஷ் (29), இவர் கடந்த 10ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் அருகே வேகமாக வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் ரமேஷை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


