தோகைமலை, அக். 14: அரசு பேருந்து மோதி வாலிபர் பலியானார். தோகைமலை காவல்சரகம் பில்லூர் ஊராட்சி சின்னப்பில்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (27). இவர் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் விஜய் தனது மோட்டார் சைக்கிளில் சின்னபில்லூர் பகுதியில் இருந்து பில்லூர் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
பெரியவீட்டுக்காரன்பட்டி ஏழுமலை தைல மரக்காடு அருகே விஜய் சென்றபோது, அதே திசையில் எதிரே அதிவேகமாக வந்த அரசு பேருந்து விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இது குறித்து விஜயின் தந்தை சின்னச்சாமி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அரசு பேருந்து ஓட்டுனர் திருச்சி மாவட்டம் அம்பாசமுத்திரம்புதூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


