கடவூர், அக்,8: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் சரகம் தரகம்பட்டி அருகே கடவூர் பகுதியில் உள்ள மேல்சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பொத்தன் மகன் முருகேசன் (41). இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். நள்ளிரவு 1 மணி அளவில் முருகேசன் என்பவரின் இடுப்பு பகுதியில் கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த முருகேசன் வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் முருகேசனை மீட்டு கடவூர் துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த முருகேசன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது குறித்து இறந்து போன முருகேசனின் சகோதரர் கணேசன் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பாலவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


