வேலாயுதம்பாளையம், செப். 30: கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் பணியாற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு(செக்யூரிட்டிகளுக்கு) தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ஒத்திகை பயிற்சி புகளூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர்(பொ) சுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி செய்து காட்டினார்கள்.
வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சிக்கி கொண்டவர்களை எப்படி காப்பாற்றுவது, வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது, வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டால் தான் எப்படி தப்பிப்பது, வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் குறித்த ஒத்திகை பயிற்சியில் காகிதஆலையில் பணியாற்றும் செக்யூரிட்டிகளுக்கு செய்து காட்டினார்கள்.
அப்போது, வாழை மரங்கள், தென்னை மட்டைகள், பிளாஸ்டிக் கேன்கள், காற்று அடிக்கப்பட்ட டியூப்புகள், கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் போன்றவற்றின் மூலம் பொதுமக்களை காப்பாற்றலாம் என்பது குறித்து ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள். ஒத்திகை பயிற்சியில் காகித ஆலையில் பணியாற்றும் அனைத்து பாதுகாப்பு பணியாளர்களும்(செக்யூரிட்டி) கலந்து கொண்டனர்.

