கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் சாலையோரங்களில் குடிமகன் அட்டகாசம்; ரோந்து போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..!
கரூர், அக். 28: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் சாலையோரம் நின்று மது குடித்து குடிமகன் அட்டகாசம் ரோந்து போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. பெரும்பாலான கடைகளின் அருகே பார்கள் செயல்படுகிறது. சில கடைகளில் பார் வசதி இல்லாமல் உள்ளது. மாநகராட்சியை தாண்டி, புற நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இதுபோன்ற கடைகளுக்கு வரும் சில குடிமகன்கள், கூட்டாக சேர்ந்து கொண்டு, சரக்குகளை வாங்கி சாலையோரமே நின்று குடித்து விட்டு செல்கின்றனர். மேலும், குடித்து விட்டு, பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை சாலையோரமே தூக்கி வீசி எரிந்து விட்டும் செல்கின்றனர்.
இதனால் சாலையோரம், சாலையோரத்தில் உள்ள பாலக்கட்டைகள் போன்றவற்றை இரவு நேரத்தில் ஆக்ரமித்து, குடிமகன்கள் குடித்து கும்மாளமிடுவதால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். பின்னர் இரவு நேரம் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பரவலாக நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த காவல் நிலைய போலீசார் ரோந்து பணிக்கு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, சாலை மற்றும் பாலக்கட்டைகளை ஆக்கிரமித்து, குடிக்கும் நிகழ்வுகளை கண்காணித்து தேவையான அறிவுரைகளை வழங்கி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


