ஜல்லி கற்கள், செங்கல் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை தேவை
கரூர், ஜூலை 28: வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் வகையில் கரூர் மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் சரக்கு வாகனங்கள் செல்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர்ப்பகுதிகளிலும் அதிகளவு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணிகளுக்காக ஜல்லிக் கற்கள், செங்கல் போன்ற பொருட்கள் அதிகளவு வாகனங்களின் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர், வேன் போன்ற வாகனங்கள் திறந்த நிலையில் செல்கிறது. அவ்வாறு மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளின் வழியாக செல்லும் போது, காற்றின் காரணமாக து£சு பறந்து, பின்னால் இரண்டு சக்கர வாகனங்களின் வருபவர்களின் கண்களை பதம் பார்க்கிறது.
இதுபோன்ற நிலைகளால் அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கட்டுமான பொருட்களை திறந்த நிலையில் ஏற்றிச் செல்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோல மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.