Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புலியூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் காத்திருப்பு உண்ணாவிரத போராட்டம்: அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

கரூர், ஜூலை 31: அம்ருத் 2.0 குடிநீர் திட்ட முறைகேடு புகார் எதிரொலியாக புலியூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு, உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 - அனைவருக்கும் குடிநீர் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, பாஜவைச் சேர்ந்த 4-வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 1-வது வார்டு கவுன்சிலர் கலாராணியும் தனது வார்டு பெண்களுடன் பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புலியூர் பேரூராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

தலைவர் புவனேஸ்வரி மற்றும் துணைத் தலைவர் அம்மையப்பன் ஆகியோர் திமுகவைச் சேர்ந்தவர்கள்.இந்நிலையில், பேரூராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் பாஜ கவுன்சிலர் விஜயகுமார், 2022-2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.18.57 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால், அதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்காமல் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், இந்த குடிநீர் திட்டம் கடந்த மார்ச் 4, 2026 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் குடிநீர் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக மாமன்றக் கூட்டத்திலும் விளக்கம் கோரியபோதும், அதிகாரிகள் எந்தவித தகவலையும் வழங்கவில்லை என்றும், திட்டத்தின் முழு விவரங்கள் வெளிப்படுத்தப்படும் வரை உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவதாகவும் விஜயகுமார் அறிவித்தார். இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 1-வது வார்டு கவுன்சிலர் கலாராணி, தனது வார்டு பெண்களுடன் பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது வார்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பேரூராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கலாராணி தெரிவித்தார். புலியூர் பேரூராட்சியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு கவுன்சிலர்களும் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.