கரூர், அக். 28: கரூர்-கோவை சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் பணியில் இல்லாமல் அலட்சியமாக இருப்பதாக வாகன ஓட்டிகள், இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
கரூரிலிருந்து-கோவை, திரூப்பூர், பழனி, பொள்ளாட்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரெட்டிப்பாளையம் பகுதியின் வழியாக செல்கிறது. இதேபோல், இந்த பகுதியில் இருந்து கரூர் வரும் வாகனங்களும் இந்த பகுதியை கடந்து கரூர் செல்கிறது. மேலும், ரெட்டிப்பாளையம் பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பல்வேறு வேலை நிமித்தமாக முக்கிய சாலையாக கோவை சாலையை கடந்தும் செல்லும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில் சிறு விபத்துக்களும் நடைபெறுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரெட்டிப்பாளையம் பகுதியை மையப்படுத்தி வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


