Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவை

அரவக்குறிச்சி, செப்.28: மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரவக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ பொருட்களில் ஒன்றாகவும், உணவு பொருட்களில் முக்கிய அங்கமாகவும் இருப்பது மஞ்சள் ஆகும். இந்த மஞ்சள் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சின்னம்மநாயக்கனூர், ராஜபுரம், நம்பகவுண்டனூர், தொக்குப்பட்டி, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. ஓராண்டு பயிரான மஞ்சளை பொதுவாக ஆடி மாதம் விவசாயிகள் பயிரிட்டு 11வது மாதத்தில் அறுவடை செய்கிறார்கள்.

நாட்டு மஞ்சள் என்னும் விரலி மஞ்சள், 8ஆம் நம்பர், 10ஆம் நம்பர் என்னும் தடிமன் கொண்ட ஹைபிரிட் மஞ்சள் வகைகள் பயிரிடப்படுகின்றன. இங்கு அறுவடையாகும் மஞ்சளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தனியார் வியாபாரிகளிடம் விற்கிறார்கள். அங்கு கொண்டு சென்று விற்கும் போது இடைத்தரகர்கள் மூலம் விற்பதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், மஞ்சளானது தமிழகத்தில் ஈரோடு, கள்ளக்குறிச்சி பகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான விவசாயிகள் மஞ்சளில் போதிய லாபம் இல்லை எனக் கூறி கரும்பு, வாழை சாகுபடிக்கு மாறிவிட்டனர். இதனால் கரூர் மாவட்டத்தில் சாகுபடி அதிகரித்து வருகிறது. இங்கு விளையும் மஞ்சளை ஈரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்தில் விற்கிறோம். ஆனால் அங்கு இடைத்தரகர்கள் தலையீட்டால் போதிய வருவாய் கிடைக்காமல் அவதி படுகிறோம். எனவே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் ஈரோட்டில் உள்ளது போல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டு, மஞ்சளை கொள்முதல் செய்தால் எங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் எங்கள் பகுதிக்கு கர்நாடகம், ஆந்திர மாநிலங்களின் மொத்த வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்ய தயாராக உள்ளனர். அதற்கும் அரசு போதிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தால் எங்களுக்கு விவசாயத்தில் மேலும் லாபம் கிடைக்கும். தொடர்ந்து மஞ்சள் விவசாயமும் சிறப்பாக நடைபெறும் எனக் கூறினர்.