Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெங்கமேடு மேம்பால பகுதிகளில் வாகன குளறுபடி கணக்கிடும் கருவி வைக்கப்படுமா?

கரூர், செப். 28: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு மேம்பாலத்தின் துவக்கத்தில் நடைபெற்று வரும் வாகன குளறுபடியை தடுத்து நிறுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வெங்கமேடு, சேலம் புறவழிச்சாலை போன்ற பகுதிகளுககு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தின் வழியாகவும், ஐந்துரோடு, ரயில்வே நிலையம், பசுபதிபாளையம், வாங்கல், நெரூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் வலது புற சாலையிலும், ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம் போன்ற மாநகராட்சி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் இடதுபுறமும் சென்று வருகிறது.

இந்த மூன்று வழிச்சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட காரணத்தினால், நெரூர் மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் கீழ்புபறம் உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று தங்கள் பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் மேம்பாலத்தின் நுழைவு வாயில் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை தடுப்புகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை பின்பற்றாமல் முன்னும் பின்னுமாக தடுப்புகளுக்கு இடையே அதனை தாண்டி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் காரணமாகவும் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுகிறது.

எனவே, மனோகரா கார்னர் போன்ற பல்வேறு சிக்னல் உளள பகுதிகளில் வாகன குளறுபடிகளை கணக்கிடும் கருவி வைக்கப்பட்டுள்ளது போல இந்த பகுதியிலும் கருவி வைத்து வாகனங்களை முறையற்ற முறையில் செலுத்துபவர்களை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.