Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அட...அறுவடைக்கு தயாராக சிறுதானியம்; முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை: தினமும் மக்களை மிரட்டி, செல்போன், பணம் பறிப்பு

கரூர், ஜூலை 27: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தில்லைநகர், தாந்தோணிமலை சிவசக்தி ஆகிய நகர்களின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் அதிகளவு குடிமகன்கள் வந்து செல்லும் கடைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகளவு வாடிக்கையாளர்கள் இந்த கடைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், அதிகளவு வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் அளவுக்கு இந்த கடையின் சுற்றுப்புற பகுதிகளில போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

கடையில் சரக்கு வாங்கிக் கொண்டு, தில்லை நகர் சிவசக்தி நகர் இடையிலான சாலையின் ஓரத்தில் நின்று சரக்கு அடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இரண்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாகனங்களிலும் நடந்தும் செல்லவும் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.

கடை செயல்படும் வளாகத்தை சுற்றிலும் முற்றிலும் தேவையான அளவு மின் விளக்கு வசதி இல்லாத காரணத்தால், பல்வேறு வழிப்பறி சம்பவமும் அவ்வப்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில், இந்த பகுதியில் நடமாடும் ஒரு சிலர், குடிக்க வருபவர்களையும், டாஸ்மாக் கடையை தாண்டி செல்லும் பிற பொதுமக்களையும் மிரட்டி, செல்போன், பணம் போன்றவற்றை பறித்துச் செல்லும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால், 10 மணிக்கு பிறகு டாஸ்மாக் கடைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நிலவி வருகிறது. முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் செயல்படும் இந்த கடையை சுற்றிலும் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி, எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தில்லை நகர், சிவசக்தி மற்றும் வடக்குத்தெரு, வஉசி தெருக்களின் முக்கிய போக்குவரத்து சாலையாக ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்கள் பீதியுடன் கடந்து செல்லும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.