தனியார், கூட்டுறவு சங்கங்களில் 4,826 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்
கரூர், செப். 26: கரூர் மாவட்டத்தில் 4,826 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளது என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் மூலம் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன், விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.

