சின்னதாராபுரம் பகுதியில் இரவு நேரங்களில் டூவீலரில் ஆற்றுமணல் கடத்தல்: போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரவக்குறிச்சி, செப்.26: சின்னதாராபுரம் அருகே இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி ஆற்றுமணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் பகுதியில் உள்ள அணைப்புதூர், பெரிய மதியக்கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி ஆற்றுமணல் அள்ளிச் செல்லப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சின்னதாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் இரவு நேரங்களில் சிலர் இருசக்கர வாகனங்களில் சென்று, ஆற்றில் இருந்து மணலை அள்ளி மூட்டைகள் மற்றும் பல்வேறு வகையான சுமை பொருட்களில் எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், இயற்கை வளம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


