கரூர் மாவட்டத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை 310 அரசு பள்ளிகளில் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: மணவாடி அரசு பள்ளியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கரூர், செப். 23: கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டத்தை கலெக்டர் முத்துக்குமரன் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணவ, மாணவியர்களுக்கு நேற்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 1,078 அரசுப் பள்ளிகளில் பயிலும் 51,942 மாணவ/மாணவியர்கள் பயன்பெறுகின்றனர்.


