வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்பி குரூப் 2, 2 ஏ போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
கரூர், ஆக. 21: வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்பி குரூப் 2, 2 ஏ போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் GROUP-II, II-A பணிகளுக்கு 821 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு, விண்ணப்பிக்கும் கடைசி தேதி 9.9.2026 ஆகும். மேலும், விபரங்களுக்கு TNPSC இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக விரைவில் நடத்தப்படவுள்ளது.
எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 Passport Size புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் ஆதார்அட்டை நகலுடன் 10.09.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test), வாராந்திர தேர்வுகள், இணையவழித் தேர்வுகள் (online test), முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Gr-2, GR-2 முதன்மை தேர்வு, Gr-4, TNUSRB, TET , COOPERATIVE EXAM ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு 04324-223555, 6383050010 மற்றும் 6374319939 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த இப்போட்டித்தேர்வினை எழுத விருப்பமுள்ள மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.



