Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

லாலாப்பேட்டை அருகே காற்றாலை அமைக்க வெட்டப்படும் மரங்கள்

லாலாப்பேட்டை செப். 17: கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் வட்டம், பாப்பாக்காபட்டி கிராமத்தில் போலி ஆவணங்கள் மூலம் தனியார் காற்றாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். காற்றாலை அமைப்பதற்காக பல லட்சம் மரங்களை வெட்டி அழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய அரசின் காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் உறுப்பினர் நாராயணன் கூறுகையில் பாப்பாக்காபட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் போலி ஆவணங்கள் தயாரித்து, தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. மேலும், காற்றாலை அமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பூர்வீகமரங்கள், வேப்ப மரங்கள் உள்ளிட்டவைகளை அனுமதியின்றி வெட்டி அழிப்பது பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மரங்களை வெட்டி அழிப்பது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் செயல். மரங்களை வெட்ட அனுமதி அளித்தவர்கள் மற்றும் காற்றாலை நிறுவனம் மீது வனத்துறை மூலம் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும. கட்டாரிப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அருகே இந்த காற்றாலைகள் அமைக்கப்படுவதால் காற்றாடி சுழலும்போது எழும் ஓசையினால் மாணவர்கள் படிப்பின் கவனச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிகளுக்கு அருகில் அமைப்பதை தடுக்க வேண்டும். மேலும், இந்த காற்றாலை நிறுவனம் மீண்டும் பணியை தொடங்கினால், பாப்பக்காப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படுமென எசரித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாப்பக்காப்பட்டி மட்டுமில்லாமல் பஞ்சப்பட்டி, கடவூர் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் காற்றாலை நிறுவனங்கள் முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்தும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்கும் காற்றாலைகளை அமைத்து வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் அளித்து குற்றம் சாட்டி வருகின்றனர்.