கரூர், செப். 17: எல்நினோ பாதிப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் கரூர் மாவட்ட பகுதிகளில் 76.20 மிமீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்த 4 மாதங்களில் பெய்யும் மழைதான் ஆண்டு சராசரியை எட்ட உதவி வருகிறது. ஆனால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு எல் நினோ பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட அளவு மழை பெய்யவில்லை. மாறாக சுட்டெரிக்கும் வெயில்தான் வாட்டி வதக்கியது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் கரூர் மாவட்டம் முழுவதும் குறிப்பாக கரூர் மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கரூரின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று இதமான சூழல் நிலவியது. அதன்படி, கரூர் 48 மிமீ, அரவக்குறிச்சி 11.40 மிமீ, அணைப்பாளையம் 7.40 மிமீ, க.பரமத்தி 9.40 மிமீ என 76.20 மிமீ மழை பெய்தது. அதிகபட்சமாக கரூர் மாநகர பகுதிகளில் பெய்த இந்த மழையின் காரணமாக சீதோஷ்ணநிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்சியடைந்தனர்.


