கிருஷ்ணராயபுரம், செப்.8: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் 3 பாசன வாய்க்கால்களில் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் இருந்து தென்கரை பாசன வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மீட்டு வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் என 4 பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் மாயனூர் திருக்காம்புலியூர் கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, மகாதானபுரம், மேட்டு மகாதானபுரம், மகிளிப்பட்டி பிள்ளபாளையம் குளித்தலை வழியாக பெட்டவாய்த்தலை திருச்சி உட்பட சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 4 ஆயிரத்து 955 கன அடி தண்ணீர் மாயனூர் காவிரி கதவணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் கதவணையில் இருந்து பிரிந்து செல்லும் தென்கரை வாய்க்காலில் 500 கன அடி தண்ணீரும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 350 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் 30 கன அடி தண்ணீரும் திறந்த விடப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாயனூர் கதவணியிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 650 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பாசன வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் மொத்தம் 5 ஆயிரத்து 530 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.


