கரூர், செப். 7: சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பெய்த லேசான சாரல் மழை காரணமாக கரூர் நகரம் குளிர்ச்சியாக காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூனில் துவங்கி செப்டம்பரி்ல் முடிவடைகிறது. இந்த நான்கு மாதங்களில் பெறப்படும் மழைதான் ஆண்டு சராசரியை எட்ட உதவி வருகிறது.ஆனால், இதுநாள் வரை இந்த சீசனில் மழை பெய்யவில்லை. மாறாக இதுநாள் வரை சுட்டெரிக்கும் வெயில்தான் வாட்டி வதக்கிறது. இந்த வெயில் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 90 டிகிரியை தாண்டியும், ஒரு சில நாட்கள் 100 டிகிரியை தாண்டியும் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று காலை 5 மணியளவில் கரூர் மாநகர பகுதியை சுற்றிலும் லேசான அளவில் சாரல் மழை பெய்து.சிறிது நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


