கரூர், செப். 7: கரூர் ராயனூர் அருகேயுள்ள நினைவு சின்ன ஸ்தூபியை சுற்றிலும் ஆக்ரமிப்புகள் உள்ளது. இதனை முறையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே நினைவு ஸ்தூபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு கூறும் வகையில் இந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியின் பராமரிப்பில் இந்த ஸ்தூபி உள்ளது.இந்நிலையில், இந்த ஸ்தூபியின் முன்பு, பார்க்கிங் ஏரியா போல, அனைத்து இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்தப்படுகிறது.
இரவு நேரங்களில் ஒரு சிலர் உள்ளே சென்று சரக்கு அடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்லும் நிகழ்வுகளும் இந்த பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.கரூர் மாநகரரில் இருக்க கூடிய ஒரே ஒரு ஸ்தூபியை கூட முறையாக பராமரிக்க முடியாமல் நிர்வாத்தினர் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஸ்தூபி பகுதியை பார்வையிட்டு இதனை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், இதனை சுற்றிலும் உள்ள சில ஆக்ரமிப்புகளை அகற்றி விட்டு, எந்த வாகனமும் நுழைவு வாயில் அருகே நிற்காத வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


