தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுறுத்தல்
குளித்தலை, நவ. 4: தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுறுத்தினார். கரூர் மாவட்டம் குளித்தலை தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள், பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து தனியார் பள்ளி மைதானத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் ரம்யா முன்னிலை வகித்தார்.
பின்னர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பேசியதாவது: தீபாவளி பண்டிகை பாதுகாப்புடன் பிறருக்கு எந்தவித இடையூறு இல்லாமலும் வெடி பொருட்களை கையாண்டு இனிப்பான விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும். வெடி மற்றும் மத்தாப்பு கொளுத்தும் போது மருத்துவமனைகள், பெட்ரோல், மண்ணெண்ணெய் கிடங்குகள் வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட் பகுதிகள், பஸ் நிலையங்கள், ஊர்திகள் செல்லும் சாலைகள், மின் டிரான்ஸ்பார்மர் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும்.
திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு வெடிக்கலாம். குடிசை வீடுகள், வைக்கோல் போர்கள், தென்னை மரங்கள். கீற்று கொட்டகைள் அருகே வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் வெடி வெடிக்கும் போது பெரியவர்கள் முன்னிலையில் 2 வாளிகள் தண்ணீர் அருகில் வைத்து பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் சென்று தீ வைப்பதை தவிர்த்து, அதற்காக உள்ள நீளமான பத்திகளை வைத்து வெடிக்க வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்படும். அதிக சத்தத்தை ஏற்படுத்த கூடிய வெடிகளை தவிர்க்க வேண்டும்.
பட்டாசு, மத்தாப்புகள் விற்பனை செய்பவர்கள் உரிமம் பெற்ற பாதுகாப்பான கட்டிடத்திற்குள் மட்டுமே வெடிபொருட்களை வைக்க வேண்டும். வெளியில் சாலைகளில் வைத்து விற்பனை செய்தல் கூடாது.
ஒவ்வொருவரும் விழிப்புடனும், பாதுகாப்புடனும் செயல்பட்டு தீபாவளி பண்டிகையை விபத்தில்லா மகிழ்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என தீயணைப்பு (ம) மீட்பு பணிகள் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


