கரூர், நவ. 4: கரூர் வேலைவாய்ப்பு மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நாளை 5ம்தேதி என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் GROUP-IV பணிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 5ம்தேதி ஆகும். மேலும், விபரங்களுக்கு TNPSC இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக விரைவில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழித் தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Gr-2, GR-2 முதன்மை தேர்வு, ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு போட்டித் தேர்வர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு 04324-223555, 6383050010 மற்றும் 6374319939 என்ற தொலை பேசியினை தொடர்பு கொள்ளலாம். கரூர் மாவட்டத்தைச் சார்ந்த இப்போட்டித்தேர்வினை எழுத விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு இத்தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


