கரூர், நவ.3: கரூர் மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளரை சந்திக்கும் வகையில் தொழிற்பேட்டை பகுதியில் முகாமிட்டதால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் செயல்படவில்லை. காலி பாட்டில்களை பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும். சி்ல்லறை தட்டுப்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் மாலை நேரத்துக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட ஏராளமானோர் நேற்று தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளரை சந்தித்து முறையிடும் வகையில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினர். இதன் காரணமாக நேற்று கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வழக்கமாக கடைகளுக்கு சென்று மதுஅருந்தும் மது பிரியர்கள், மற்ற பகுதிகளில் இயங்கி வந்த ஏசி பார்களை நாடிச் சென்றதால் அந்த பகுதிகளும் பரபரப்புடன் காணப்பட்டது.


