கடவூர், நவ.3: கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டி சமத்துவபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு வாலிபர் நடமாடுவதாக சிந்தாமணிபட்டி போலீசாருக்கு இப்பகுதியினர் தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சிந்தாமணிபட்டி எஸ்ஐ தங்கசாமி அந்த பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் வீட்டை உடைத்து திருடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பெரிய இரும்பு ராடை இடுப்பில் சொருகியபடி சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார்.
இதனால் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி நண்டுகுளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் இளையராஜா (28) என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தபோது, இந்த பகுதியில் ஏதாவது ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருடலாம் என்று நோட்டமிட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் அவரிடமிருந்து இரும்பு ராடு மற்றும் மறைத்து வைத்திருந்த திருப்பலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இளையராஜா மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


