Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகர்கோவில் பகுதியில் வீடுவீடாக சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழ் மாநகராட்சி ஊழியர்கள் வழங்கினர்

நாகர்கோவில், ஏப். 11: நாகர்கோவில் மாநகர பகுதியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வீடுவீடாக சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழை மாநகராட்சி ஊழியர்கள் வழங்கினர். குமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின்பேரில் நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் மாநகர் நல அதிகாரி டாக்டர் சரோஜா தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் தேர்தல் திருவிழா அழைப்பிதழை, வீடுவீடாக சென்று கொடுத்து வருகின்றனர். தாம்பூல தட்டுடன் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் அந்த அழைப்பிதழை கொடுத்து கண்டிப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று வடசேரி பகுதியில் சுகாதார அலுவலர் ஜான் ஜோனாபார்க், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அழைப்பிதழை கொடுத்தனர். இதுபோல் மாநகர் நல அதிகாரி சரோஜா அண்ணா பஸ் நிலையம் பகுதியில் பஸ்களில் ஏறி பயணிகளிடம் அழைப்பிதழை வழங்கினார். அந்த அழைப்பிதழில் ‘தேர்தல் திருவிழா, தமிழ்நாடின் பெருவிழா, தேர்தல் திருவிழா அழைப்பிதழ் கன்னியாகுமரி மாவட்டம்.

அன்புடையீர் வணக்கம், நிகழும் மங்களகரமான பராபவ வருடம் சித்திரை 10ம் நாள் (23-4-2026) வியாழக்கிழமை நலம் தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் திருவிழா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, தங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளைப் பதிவு செய்யமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.’ இவ்வாறு அந்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.