Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குமரியில் 2 வாரம் பெய்த மழைக்கு பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 14.30 அடி உயர்வு; மேலும் 9 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்..!

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, மாவட்டத்தின் பிரதான பாசன ஆதாரமான பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களில் மட்டும் 14.30 அடி உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுகிறது. நேற்று பகல் வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பு, கடந்த அக்டோபர் 13-ம் தேதி நிலவரப்படி பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 38.65 அடியாக மட்டுமே இருந்தது.

இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.95 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மழைக்குப் பின்னர் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் மட்டும் கிடுகிடுவென 14.30 அடி உயர்ந்து விவசாயிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. 77 அடி உச்ச நீர்மட்டம் (முழு கொள்ளளவு) கொண்ட இந்த அணைக்கு வினாடிக்கு 760 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 25 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோன்று, 48 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மற்றொரு பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் அக்டோபர் 13-ல் 18.04 அடியாக இருந்த நிலையில், தற்போது 8 அடிக்கும் மேல் உயர்ந்து 26.09 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 820 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்தும் பாசனத்திற்காக வினாடிக்கு 116 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 54.12 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மாம்பழத்துறையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் தற்போது 52.08 அடியாக நிரம்பியுள்ளது (நீர்வரத்து 26 கன அடி). 18 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 7.48 அடியாகவும் (நீர்வரத்து 53 கன அடி), சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 7.57 அடியாகவும் (நீர்வரத்து 85 கன அடி) உள்ளது. 42.65 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 14.8 அடியாகவும், 25 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.1 அடியாகவும் உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைந்து மிதமான மற்றும் லேசான சாரல் மழையாகப் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 26 மழைமானி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 176.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது; மாவட்டத்தின் சராசரி மழையளவு 6.77 மி.மீ ஆகும். அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் 36.2 மி.மீ மழையும், ஆனைக்கிடங்கு பகுதியில் 35.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பாலமோர் 25.2, ஆரல்வாய்மொழி 12.4, கொட்டாரம் 9.6, நாகர்கோவில் 8.8, குழித்துறை 6.6, கன்னிமார் 4.4, முள்ளங்கினாவிளை 4.4, கோழிப்போர்விளை 4.2, திற்பரப்பு 4.2, சிவலோகம் (சிற்றாறு 2) 4, சுருளோடு 3.6, தக்கலை 3, களியல் 3, முக்கடல் அணை 2.3, இரணியல் 2, குருந்தன்கோடு 2, புத்தன் அணை 2, பூதப்பாண்டி 1.2 மற்றும் பெருஞ்சாணி 1.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, சிற்றாறு 1, குளச்சல், மயிலாடி மற்றும் அடையாமடை பகுதிகளில் நேற்று மழை பதிவாகவில்லை. மழையினால் 2 குடிசை வீடுகளும், 7 ஓடு மற்றும் கான்கிரீட் வீடுகளும் பகுதியாகச் சேதமடைந்துள்ளன என்று வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.