Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் எடுத்தால் பயண காப்பீடு; தெற்கு ரயில்வேயில் நேற்று அமலுக்கு வந்தது!!

நாகர்கோவில், அக்.28: ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் (பிஆர்எஸ் கவுன்டர்) நேரடியாகப் படிவம் கொடுத்து டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கும் விருப்பப் பயணக் காப்பீட்டுத் திட்டம் நேற்று (27ம் தேதி) முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுநாள் வரை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி வழியாக ஆன்லைனில் இ-டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே மிகக் குறைந்த கட்டணத்திலான பயணக் காப்பீடு பெறும் வசதி நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது இந்த வசதி ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிகள் பயணக் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற முடியும். இந்த வசதியைப் பெற விரும்பும் பயணிகள், முன்பதிவு கவுன்ட்டர்களில் பூர்த்தி செய்து கொடுக்கும் விண்ணப்பப் படிவத்திலேயே அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக முன்பதிவு படிவத்தில் பிரத்யேகக் கட்டமும், காப்பீடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகப் பயணியின் செல்போன் எண்ணைப் பதிவு செய்வதற்கான பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டு வசதி முற்றிலும் பயணிகளின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது ஆகும். பயணிகள் தங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் டிக்கெட் முன்பதிவின் போது இதனை தேர்வு செய்துகொள்ளலாம். ரயில் பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகளின் போது பயணிகளுக்குக் கூடுதல் நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருவனந்தபுரம் கோட்டத்திற்கு கன்னியாகுமரி, நாகர்கோவில், இரணியல், குழித்துறை உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகள், தங்களது செல்போன் எண்ணைத் தெளிவாகக் குறிப்பிட்டு, இந்த விருப்பக் காப்பீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.