Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரப்பர் விலை கிலோ ரூ.295 ஆக உயர்ந்து புதிய உச்சம்..!

நாகர்கோவில், அக்.28: உள்நாட்டுச் சந்தையில் ரப்பர் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கேரளாவின் முக்கிய வர்த்தகச் சந்தைகளான கோட்டயம் மற்றும் கொச்சி சந்தைகளில், உயர் ரகமான ஆர்.எஸ்.எஸ்-4 ரப்பரின் விலை கிலோ நேற்று ரூ.295 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியன்று ரூ.284 எட்டியிருந்த ரப்பர் விலை, பின்னர் கடந்த 12-ம் தேதியன்று மீண்டும் ரூ.284-ஐக் கடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் அதிகரித்து ரூ.293.50-ஐ எட்டியுள்ளது. நேற்று கிலோ ரூ.295 என்ற அளவை எட்டியுள்ளது. சர்வதேச அளவிலான பாங்காக் சந்தையில் இதன் விலை ஒரு கிலோ நேற்று முன்தினம் ரூ.269.68 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.268.78 ஆக சற்று குறைந்து விற்பனையானது. இதனைவிட இந்திய உள்நாட்டுச் சந்தையில் விலை மிக அதிகமாக உள்ளது. இந்திய டயர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ரப்பர் சார்ந்த பிற துணைத் தொழிற்சாலைகளில் ரப்பருக்கான தேவை பன்மடங்கு அதிகரித்திருப்பது இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அதேசமயம், தோட்டங்களில் பால் வடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும், சந்தையின் முழுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் போதிய ரப்பர் ஷீட்கள் விற்பனைக்கு வரவில்லை.

சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சரக்குக் கப்பல் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்வது தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகாமல் போய்விட்டது. இதன் காரணமாக இறக்குமதி சரிந்து உள்நாட்டு ரப்பருக்கான மதிப்பு கூடியுள்ளது.