Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குமரியில் நெல் சாகுபடி பணியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இயந்திர நடவு அதிகரிப்பு

நாகர்கோவில், மே 23: குமரி மாவட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் வயல்களில் இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை வருகிற 26ம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்தில் கன்னிப்பூ சாகுபடியில்தான் அதிக லாபம் கிடைக்கும். பூச்சி தாக்குதல் குறைவு, சாகுபடி நாளில் இருந்து அறுவடை நாட்களும் குறைவு. இதனால் கன்னிப்பூ சாகுபடி பணியை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமாக இருப்பர். கடந்த காலத்தில் நெல் சாகுபடியின்போது நாற்று நடவு பணியை மேற்கொள்ள பெண் தொழிலாளர்கள் அதிகம் இருந்தனர்.

தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இயந்திர நடவு செய்தால் அதிக மகசூல் கிடைப்பது மட்டுமல்லாமல், செலவு குறைவு. அதனால் இயந்திர நடவு பணிகளை மேற்கொள்ள வேளாண்மை துறை வலியுறுத்தி வருகிறது. கடந்த கன்னிப்பூ சாகுபடியின்போது இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியமும் வழங்கியது. இதனால் குமரி மாவட்ட விவசாயிகள் பலர் தற்போது இயந்திர நடவு பணிக்கு மாறியுள்ளனர். இயந்திர நடவு செய்யும்போது தட்டு வைத்து, அதில் வயலில் உள்ள கழிமண் போட்டு அதன் மேல் நெல்விதைகளை தூவி நாற்றங்கால் தயார் செய்வார்கள். இதற்கு என்று தனியாக தொழிலாளர்கள் உள்ளனர். நாற்றங்காலுக்கு நெல் விதைத்து சுமார் 7 நாட்கள் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும்.

ஒரு தட்டு நாற்றங்கால் தயாரிக்க ரூ.40 முதல் ரூ.45 வரை கூலியாக வாங்கப்படுகின்றன. நெல் விதைகளை விவசாயிகள் கொடுத்துவிடவேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4500 வரை கட்டணமாக வசூல்செய்யப்படுகிறது. நாற்றங்கால் தயாரித்து 14 நாட்களில் இருந்து 18 நாட்களுக்குள் நடவு செய்துவிடலாம். இயந்திரம் மூலம் நடவு செய்வதால், இடைவெளிகளும் அதிகமாக இருப்பதுடன், பயிர்களும் செழிப்பாக வளரும். குமரி மாவட்டத்தில் தற்போது ெதாழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் இயந்திர நடவு பணிக்கு மாறியுள்ளனர்.