Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

துணை தாசில்தார்கள் நியமன விவகாரம்; குமரி கலெக்டர் அறை முன் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்: டி.ஆர்.ஓ. சமரசத்தை ஏற்க மறுப்பு

நாகர்கோவில், மே 23: குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, குமரி மாவட்ட வருவாய் துறை ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலக அறை அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட வருவாய் துறையில் காலியாக உள்ள 7 துணை தாசில்தார்கள் பணியிடங்களை தகுதி உள்ளவர்களை கொண்டு தற்காலிகமாக நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை சங்க மாவட்ட நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கில் வேண்டுமேன்றே இடம் மாற்றம் செய்ததை உடனே ரத்து செய்ய வேண்டும். தாசில்தார்களை ஓராண்டு காலம் பணி நிறைவு செய்யாமல் பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள கலெக்டர் அலுவலக அறை முன் நேற்று காலை 11 மணிக்கு காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதை சார்ந்த அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் முதல் தளத்தில் தரையில் வரிசையாக அமர்ந்திருந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கோலப்பன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் பத்மகுமார் உள்பட வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை ஊழியர்களுடன் முதலில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகிதா பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை நேரடியாக வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஏற்கனவே இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் இந்த சமரசத்தை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இதனால் போராட்டம் நீடித்தது. வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

வருவாய் துறையினர் நேற்று நடத்திய போராட்டம் மாலை 5.45க்கு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் தற்காலிக துணை வட்டாட்சியர் நியமனம் செய்யப்படும் என கலெக்டர் உறுதி அளித்து உள்ளதாக, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறினர். ஓரிரு நாட்களில் நியமனம் இல்லை என்றால், மீண்டும் போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் கூறினர்.

மாறுதல் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்

இது குறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் கூறுகையில், வட்டாட்சியர் அலுவலகங்களில் தலைமை இடத்து துணை தாசில்தார் உட்பட மொத்தம் ஏழு துணை தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிச்சுமை மற்றும் மக்களின் மனுக்கள் மீதான விசாரணையை உடனடியாக விரைந்து முடிக்கும் வகையில் தற்காலிகமாக இந்த 7 பணியிடங்களுக்கும் துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட வேண்டும். நீதிமன்ற விவகாரம் உள்ளதால், தற்காலிகமாக துணை தாசில்தார்கள் நியமிக்க கலெக்டருக்கு அதிகாரம் உண்டு. ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் நாங்கள் நேரடியாக கோரிக்கை வைத்திருந்தோம்.

தேர்தல் முடிவடைந்ததும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியாக தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. புதிய அரசும் பொறுப்பேற்று இருக்கிறது. ஆனால் எங்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இது மட்டுமின்றி தாசில்தார்களை ஒரு வருட காலத்திற்குள் பணியிடம் மாற்றம் செய்வது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது. ஆனால் பலரை ஒரு வருட காலத்துக்குள் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் இருந்து மாற்றி உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்.

வருவாய்த்துறை சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து பலமுறை வலியுறுத்திய பிறகும் இன்னும் கிடப்பில் கிடப்பதால் தற்போது அகிம்சை வழியில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார்.